பள்ளி பாடத்திட்டம் குறைப்பு.!தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுமா.? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..

0
Follow on Google News

பள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிவர் புயலினை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டதன் அடிப்படையில், பாதிப்புகள் குறைவாக உள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு ஆணையினை வழங்கியதன் அடிப்படையில், 405 மாணவர்கள் மருத்துவர்கள் ஆகக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பினை பயிலும் வரலாறு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது. பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. 5 நாட்களில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும். புதிய கல்வி கொள்கை குறித்து கருத்துக்களை அறிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்களை திரட்டி வருகிறது.

புயல் நிவாரணம் குறித்து குற்றம்சாட்டும் மு.க ஸ்டாலின் மேயராக இருந்த போது மழைபாதிப்புகள் அவருக்கு தெரியாமல் போனது ஏன். தமிழகம் மின் வெட்டு இல்லாத மாநிலமாக உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி சிறந்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. வாங்கிய கடனை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி செலுத்தும் ஆற்றல் தமிழக மக்களிடம் உள்ளது. 2.17 கோடி மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்திய குடிமை பணி தேர்விற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி மாதத்தில் பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும், அணையின கொள்ளளவானது குறையாமல் அப்படியே உள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நாட்டின கன்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.