எடப்பாடி அரசே தேவேந்திரகுல மக்களை சீண்டிப் பார்க்காதே! புதிய தமிழகம் கட்சி கடும் எச்சரிக்கை.!

0
Follow on Google News

புதிய தமிழகம் கட்சியின் அவசர மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம். கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, தலைமையில் நடைபெற்றது அதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ”7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட 7 சாதி உட்பிரிவுகளின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பட்டியல் வகுப்பில் தொடரவும், தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும் இப்பிரிவினர் ஏற்கெனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும்”

என்ற தமிழக அரசின் அறிவிப்பானது உலகெங்கும் வாழக்கூடிய இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாகும். இது நூறாண்டுகால பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு நேர் எதிரானது மட்டுமல்ல, கடும் ஆட்சேபனைக்குரியதும், கண்டனத்திற்குரியதும், அவர்களை மீண்டும் அவமானப்படுத்துவதாகும். தேவேந்திரகுல வேளாளர் என்றப் பொதுப் பெயர் மாற்றமும், பட்டியல் மாற்றமும் ஒன்றையொன்றுப் பிரித்துப் பார்க்க முடியாதக் கோரிக்கைகள் தான்.

தேவேந்திரகுல வேளாளர் என்பது யாருடைய கண்டுபிடிப்பும் அல்ல, புதுப் பெயரும் அல்ல. இது ஏற்கெனவே அம்மக்களால் தொன்றுதொட்டு பல நூறாண்டுகாலமாகப் பயன்படுத்தி வரக்கூடியப் பெயர்தான்; அதற்கான அரசாணை மட்டுமே வலியுறுத்தி வந்தோம். இம்மண்ணின் மூத்தக்குடி மக்களான தேவேந்திரகுல வேளாளர்கள் ஆங்கிலேயருடைய காலத்தில் தவறுதலாகப் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டுவிட்டதால், அவர்கள் சமூகத்தில் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கும் ஒதுக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், தலித், அரிஜன், ஆதிதிராவிடர்கள், அட்டவணைச் சாதியினர் என ஆளாளுக்கு பெயர் சூட்டுவதை இம்மக்கள் அறவே வெறுத்தே, சலுகைகளைத் தியாகம் செய்தாகினும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறுவதே தங்களுடைய உயிரினும் மேலான இலட்சியமாகக் கருதிப் போராடி வருகிறார்கள். ஒரு மிகப்பெரியப் பூர்வீகக் குடி மக்களுடைய நூறாண்டுகாலப் போராட்டத்தின் உள்ளார்ந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும் அவர்கள் தொடர்ந்து பட்டியல் பிரிவில் நீடிப்பார்கள் என்ற அதிமுக அரசின் முடிவு தேவேந்திரகுல வேளாளர்களுடைய உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கக்கூடியதாகும். பட்டியல் மாற்றத்திற்குப் பரிந்துரைக்காமல் பெயர் மாற்றத்திற்குச் செய்யப்படும் பரிந்துரை உயிரற்ற உடலுக்குச் சமமானதே. எனவே,

”இரண்டு கோடி தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்டநெடுநாளைய கோரிக்கைகளுக்கு மாறாக, அவர்களைத் தொடர்ந்து பட்டியல் பிரிவிலே நீடிக்கப் பரிந்துரை செய்யும் எடப்பாடி அரசைக் கண்டித்தும், பெயர் மாற்றத்துடன் கூடியப் பட்டியல் மாற்றத்திற்கு மட்டுமே பரிந்துரை செய்யக் கோரியும், தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும், முதல்கட்டமாக 2021-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6-ஆம் தேதி இலட்சக்கணக்கான தேவேந்திரகுல மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக நடத்திட முடிவு செய்யப்படுகிறது.”*